கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவிவிட்டதா?-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதில்
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவிவிட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவியுள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மந்திரி பதிலளித்துள்ளார்.சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குரங்கு அம்மை
முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று வருகிற 28-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி தொட்டபள்ளாப்புராவில் பிரமாண்ட மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 4 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஓராண்டில் பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவி பெரும் சவால் ஏற்பட்டது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம். நமது அண்டை நாடான இலங்கை ஊரடங்கிற்கு பிறகு திவாலாகிவிட்டது. ஆனால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவவில்லை. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
ஜெயதேவா ஆஸ்பத்திரி
இந்த குரங்கு அம்மை கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஜெயதேவா ஆஸ்பத்திரி இயக்குனராக டாக்டர் மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். அவரது பணியை நீட்டிப்பு செய்வது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்வார்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.