மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதியா? மத்திய மந்திரி பதில்

எம்.பி. ரவிக்குமார், ‘மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முடிவு எடுத்திருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

Update: 2022-08-04 23:41 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், 'மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முடிவு எடுத்திருக்கிறதா?' என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி பிஷ்வேஸ்வர் துடு கூறியதாவது:-

மேகதாது திட்டம் தொடர்பான கர்நாடகத்தின் சாத்தியக்கூறு அறிக்கை, மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கொள்கை அளவிலான அனுமதியை பெறுவதற்காக மத்திய நீர்வள ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நீர்வள ஆணையம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொள்கை அளவிலான அனுமதியை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டால் மாற்றி அமைக்கப்பட்ட காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக்கொள்வது இதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மேகதாது விரிவான திட்ட அறிக்கை கர்நாடக அரசால் 2019-ம் ஆண்டு ஜனவரியில் மத்திய நீர்வள ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன் நகல்கள் மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டன. மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின்போது மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், அதன் மீது விவாதம் நடைபெறவில்லை.

இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பதில் மழுப்பலான பதில் என்றும், கர்நாடகத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்றும் ரவிக்குமார் எம்.பி. கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்