சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல ஆன்லைன் நுழைவுச்சீட்டு பெறும் நடைமுறை அறிமுகம்
சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல நுழைவுச்சீட்டு பெறுவது கட்டாயமாகும். இதன்படி சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தின் வாயிலில் அமைந்துள்ள கவுண்ட்டரில் நுழைவுச்சீட்டை பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் கவுன்ட்டரில் நுழைவுச்சீட்டை பெற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் 'சுஸ்வாகதம்' (https://suswagatam.sci.gov.in) என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தலைமை நீதிபதி சந்திரசூட் அறிமுகம் செய்து வைத்தார். இந்த இணையதளம் வாயிலாக ஆன்லைனில் நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு செல்ல விரும்பும் பார்வையாளர், மனுதாரர் ஆகியோர், மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அடையாள ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் ஒரு மாதத்துக்கான நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூலை 25-ந்தேதி சோதனை அடிப்படையில் ஆன்லைன் நுழைவுச்சீட்டு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து முழுமையாக அமலுக்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.