குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிரட்டல்: பிரதமர் மோடி பேச்சு

குஜராத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் மிரட்டப்பட்டனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-09-27 07:51 GMT

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அவரை கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் ஆகியோர் வரவேற்றனர்.

இதன்பின்னர், சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை அவர் பார்வையிட்டார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாட்டையும் தொடக்கி வைத்துள்ளார். இதன்பின்பு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, இதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் குஜராத்தின் வளர்ச்சியை அரசியலுடன் தொடர்புப்படுத்தி வந்தனர்.

அப்போது மத்திய அரசில் மந்திரியாக இருந்தவர்கள், துடிப்பான குஜராத்துக்கு வருவதற்கு மறுத்து விடுவது வழக்கம். அவர்கள் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. குஜராத்தின் மதிப்பு குறைந்து போவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

அவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்துவது வழக்கம். அவர்கள், முதலீட்டாளர்களை குஜராத்திற்கு வரவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றனர். இப்படி பலமுறை அச்சுறுத்தல் இருந்தபோதும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குஜராத்திற்கு வருகை தந்தனர் என பேசியுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, நாங்கள் குஜராத் மீண்டும் வளர்ச்சி அடைவதற்கான பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல், அதன் வருங்காலம் பற்றியும் யோசித்தோம்.

இதற்கான ஒரு முக்கிய சேனலாக, நாங்கள் துடிப்பான குஜராத் ஒன்றை உருவாக்கியுள்ளோம். குஜராத்தின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கான சேனல் இது. உலக நாடுகளுடன் நேருக்கு நேராக பேசுவதற்கான சேனல் இதுவாகும்.

துடிப்பான குஜராத் தொடங்கப்பட்டபோது, வெளிநாட்டு விருந்தினர்கள் தங்குவதற்கு பெரிய ஓட்டல்கள் எதுவும் இல்லை. அரசு விருந்தினர் இல்லங்கள் நிறைந்தபோதும், நாம் பெரிய பல்கலைக்கழக விருந்தினர் இல்லங்களை பயன்படுத்தி வந்தோம் என்று அவர் பேசியுள்ளார்.

குஜராத்தில், 22 மாவட்டங்களில் கிராமப்புற வைபை வசதிகள் உள்பட ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி, சோட்டா உதேப்பூரில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வைபை வசதிகளால் 7,500 கிராமங்களை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடைவார்கள்.

இதேபோன்று, திறன் திட்டங்களுக்கான பள்ளிகள் இயக்கத்தின் கீழ், ரூ.4,505 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்