''இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்கக்கூடாது'' பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு நிபந்தனை மக்களவையில் தகவல்

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தனது மண்ணில் அனுமதிக்கக்கூடாது என்று பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நிபந்தனை விதித்தது.

Update: 2023-02-10 20:00 GMT

புதுடெல்லி, 

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தனது மண்ணில் அனுமதிக்கக்கூடாது என்று பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நிபந்தனை விதித்தது.

முதுநிலை நீட் தேர்வு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு மார்ச் 5-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சிலர், தங்களது பயிற்சி மருத்துவம் முடிவடையாததால், முதுநிலை நீட் தேர்ைவ தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டமும் நடத்தினர்.

இந்தநிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தில் இதுபற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

முதுநிலை நீட் தேர்வு, திட்டமிட்டபடி மார்ச் 5-ந் தேதி நடைபெறும். 5 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. விண்ணப்பித்த மாணவர்கள், தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

பயிற்சி மருத்துவம் முடிக்காத மாணவர்களுக்கு ஏற்கனவே கால நீட்டிப்பு அளிக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கூறியதாவது:-

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்ததாக பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். அண்டை நாடுகளுடன் இயல்பான உறவை இந்தியா விரும்புகிறது.

இருப்பினும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்கு பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத சூழ்நிலையில்தான் தீர்வு காண வேண்டும். அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவது பாகிஸ்தான் பொறுப்பு. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதம் தனது மண்ணில் நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒமைக்ரான் ஆதிக்கம்

மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-

ஒமைக்ரானும், அதன் உருமாறிய வகை கொரோனாக்களும் இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கடந்த 60 நாட்களாக நடத்தப்பட்ட பகுப்பாய்வில், 90 வகையான உருமாறிய கொரோனாக்கள் கண்டறியப்பட்டன.

அவற்றில், எக்ஸ்பிபி, பிகியூ ஆகிய வகைகள் அதிகமாக புழங்குகின்றன.

கர்னல் அந்தஸ்தில் பெண் அதிகாரிகள்

மக்களவை கேள்வி நேரத்தில் ராணுவ இணை மந்திரி அஜய்பட் கூறியதாவது:-

கடந்த 3 நிதிஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் கோடியாக இருந்தது.

தற்போது லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளில் 108 பேர், விரைவில் கர்னல் அந்தஸ்தில் நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய வர்த்தக இணை மந்திரி சோம் பிரகாஷ் கூறியதாவது:-

இந்தியாவில் 1,333 பன்னாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே சமயத்தில், 4 ஆயிரத்து 906 புதிய பன்னாட்டு நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவை வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்