கடந்த ஓராண்டாக தினமும் சுமார் ரூ.1,600 கோடி வருமானம் ஈட்டிய கவுதம் அதானி
கடந்த ஆண்டில் கவுதம் அதானி நாளொன்றுக்கு ரூ.1,600 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
நியூயார்க்,
கடந்த சில தினங்களுக்கு முன் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இப்போது உலகின் டாப்-10 உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக கவுதம் அதானி உள்ளார்.
சமீப காலமாகவே அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி வேகமாக முன்னேறி வருகிறார். இந்த ஆண்டு பிப்ரவரியில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்தார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஏப்ரலில், கவுதம் அதானியின் நிகர மதிப்பு டாலர் 100 பில்லியனைத் தாண்டியது, கடந்த ஜூலையில், அவர் மைக்ரோசாப்டின் பில் கேட்ஸை விஞ்சி உலகின் நான்காவது பணக்காரர் ஆனார். அதை தொடர்ந்து அவர் ஆகஸ்ட் 30 அன்று, பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது பெரிய பணக்காரர் ஆனார்.
இந்த நிலையில் கவுதம் அதானி கடந்த ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1,600 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார் என்று ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.
ஐஐஎப்எல் வெல்த் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2023-யின் படி கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு அதானி ரூ.1,612 கோடி சம்பாதித்து உள்ளார். இதன் மூலம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.10,94,400 கோடியாக உள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானியை விட 3 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.
துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்துள்ள அதானி குழுமம் இந்த துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.