உலகளாவிய வளர்ச்சி இயந்திரம் ஆக உருவெடுத்த இந்தியா: ராஜ்நாத் சிங் பெருமிதம்
21-ம் நூற்றாண்டை இந்தியாவுக்கான நூற்றாண்டாக மாற்ற அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வரும்படி வர்த்தக தலைவர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் 96-வது வருடாந்திர பொது கூட்ட நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகளாவிய வளர்ச்சி இயந்திரம் ஆக இந்தியா உருவெடுத்து உள்ளது. அதனுடன், உலகிற்கு ஒரு புதிய வளர்ச்சிக்கான பாதையையும் வழங்கி வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சியானது, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுக்கான தலைமைத்துவத்தின் கீழ், நூறு கோடிக்கும் கூடுதலான இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் திறமையின் முடிவால் கிடைத்தது என உறுதிப்பட கூறினார். வளர்ச்சியை ஊக்குவித்து, வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்வதற்கான வழிமுறையாகவும் இந்த வளர்ச்சிக்கான இயந்திரம் உள்ளது என்றும் பேசியுள்ளார்.
20-ம் நூற்றாண்டில், உலகளவில் வளர்ச்சி இயந்திரத்திற்கான நாடாக அமெரிக்கா தனது பங்கை ஆற்றியது. 21-ம் நூற்றாண்டின் முதல் 15 முதல் 20 ஆண்டுகாலத்தில் அதே பணியை சீனா செய்து வந்தது. உலகில் தற்போது, விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
அதனால், உலகின் பிற நாடுகளின் வளர்ச்சியில் ஒரு பெரிய நேர்மறை தாக்கம் ஏற்படுத்த கூடிய ஓரிடத்திற்கு இந்தியாவின் வளர்ச்சி வந்தடைந்து உள்ளது தெளிவாக தெரிகிறது.
அதனாலேயே, வளர்ச்சி இயந்திரம் என இந்த தருணத்தில் இந்தியா அழைக்கப்படுகிறது. அது சரியானதும் கூட என்று அவர் பேசியுள்ளார். 21-ம் நூற்றாண்டை இந்தியாவுக்கான நூற்றாண்டாக மாற்ற அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வரும்படி வர்த்தக தலைவர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.