இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளது இந்தியா: ஐ.நா. பொதுசபை தலைவர் புகழாரம்
ஐ.நா. பொதுசபையில் 5 குழுக்கள் பிரிந்து கிடக்கின்றன என இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள அதன் தலைவர் கொரோசி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஐ.நா. பொதுசபையின் தலைவர் சாபா கொரோசி முதன்முறையாக இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், தலைவர் பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணமும் இதுவாகும்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதில், உக்ரைன் போர் பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் அவர் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை இன்று சந்தித்து பேசினார். ஜி-20 பற்றியும் விவாதிக்கப்பட்டு உள்ளது.
இதன்பின் கொரோசி இன்று கூறும்போது, இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதில், இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை இந்தியா கொண்டுள்ளது. அது நடைபெற வேண்டும் என்பதற்காக பொது சபையில் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.
ஐ.நா. பொதுசபை பிரிந்து கிடக்கிறது. குறைந்தது 5 குழுக்கள் பிரிந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. அதனாலேயே அனைத்து உறுப்பு நாடுகளிடமும், அவர்கள் அனைவரிடமும், இந்த சீர்திருத்தங்களை தீவிரமுடன் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளேன்.
அது விவாதங்களுக்கான மிக பெரிய இயக்கும் விசயங்களில் ஒன்றாக உள்ளது. உலகில் அமைதியை பாதுகாக்கும் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறந்த அதிகாரங்களை இந்த 5 குழுக்கள் கொண்டுள்ளன.
ஒருவருக்கு ஒருவர் ஊக்கம் அளிப்பதற்காக இந்த அதிகாரம் இருந்தது. தற்போது, ஒருவரை ஒருவர் தடுப்பதற்காக இந்த வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.