தனியார் ஆஸ்பத்திரி, ஆய்வுக்கூடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

பெங்களூரு உள்பட 3 மாவட்டங்களில் தனியார் ஆஸ்பத்திரிகள், ஆய்வு கூடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-16 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு உள்பட 3 மாவட்டங்களில் தனியார் ஆஸ்பத்திரிகள், ஆய்வு கூடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வருமான வரி சோதனை

பெங்களூரு, உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், ஆய்வு கூடங்களில் கொரோனா காலத்தில் நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்ததுடன், அதற்கு உரிய கணக்கை அரசுக்கு தாக்கல் செய்யாமலும், முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் வந்தது.

இந்த நிலையில், பெங்களூரு, பெலகாவி, உப்பள்ளி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், ஆய்வுக்கூடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். மும்பையில் இருந்து கர்நாடகத்திற்கு 7 கார்களில் வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினார்கள். அதிகாலை 4 மணிக்கே பெங்களூரு, பெலகாவி, உப்பள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பெங்களூரு மல்லேசுவரத்தில்...

பெங்களூரு மல்லேசுவரம் 15-வது கிராசில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஆய்வுக்கூடத்தில் மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆய்வகத்தின் முக்கிய நிர்வாகி நாகபூஷண ராவ், ரவி மற்றும் ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றார்கள். கொரோனா சந்தர்ப்பத்தில் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து இருந்ததும், இதற்காக போலி ஆவணங்களை அரசுக்கு வழங்கி வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரி, ஆய்வக ஊழியர்களிடம் தினமும் எத்தனை நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்ந்தார்கள்?, எத்தனை பேருக்கு ஆய்வகங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது?, அவர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் பெறப்பட்டது?, அதுபற்றி முறையாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து தகவல்களை பெற்றனர்.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது

இதுபோல், பெலகாவி, உப்பள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், ஆய்வுக்கூடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், நிர்வாகிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தார்கள்.

சோதனை நடத்தப்பட்ட அந்த ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்