பாகேப்பள்ளி கிராமத்தில் சம்பவம்:தலித் வாலிபருக்கு கத்திக்குத்து
பாகேப்பள்ளி கிராமத்தில் தலித் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா கெம்பேதேவனஹள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலித் சிறுவன் ஒருவர், ஒரு சிறுமியின் கம்மலை திருடிவிட்டதாக கூறி தாக்கப்பட்டான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனது பெற்றோரை பங்காருபேட்டை எம்.எல்.ஏ. நாராயணசாமி சந்தித்து ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார்.
இந்த நிலையில், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா பாகேப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள அதே கிராமத்தை சேர்ந்த தலித் வாலிபர் ஹரீஷ்(வயது 24), தனது நண்பர் நாகேசுடன் சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர், ஹரீஷை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிந்தாமணி தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.