மைசூருவில் தொடர் மழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மைசூருவில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
மைசூரு:
கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதேபோல் மைசூருவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவும் மைசூருவில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். டி.நரசிப்புராவில் கால்வாய் ஒன்று உடைந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் விளைந்திருந்த கரும்பு, நெல் நாசமானது. எச்.டி.கோட்டையில் சில கிராமங்களில் வீடுகளின் சுவர்கள் மழையால் நனைந்து இடிந்து விழுந்துள்ளது. மைசூரு டவுன் இலைதோட்டம் என்ற இடத்தில் இருக்கும் கால்வாய்க்குள் முதலை ஒன்று வந்தது. இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவலின் பேரில் வனத்துறையினர் வந்து பல மணி நேரம் போராடி முதலையை பிடித்து சென்றனர். மைசூரு தாலுகா ஹிரிகேத்தனஹள்ளி கிராமத்தில் காலே கவுடா என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
நேற்றும் மைசூரு டவுன் உள்பட இடங்களில் காலையில் இருந்து இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.