இமாசலப்பிரதேசத்தில் தொடர் மழை: வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு
இமாசலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சிம்லா,
இமாசலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்தவகையில் மாண்டி மாவட்டத்தில் உள்ள கோல் அணையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், அதிகமான மரத்துண்டுகளும் அணைக்கு அடித்து வரப்பட்டு உள்ளன.
இந்த நீர்மட்டம் மற்றும் மரத்துண்டுகளின் பெருக்கத்தை கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் 5 பேர் மற்றும் உள்ளூர் மக்கள் 5 பேர் என 10 பேர் நேற்று முன்தினம் மாலையில் ஒரு படகில் அணையில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இவர்களது படகு அணைக்கு மேல் கிடந்த மரத்துண்டுகள் மற்றும் வண்டலில் சிக்கிக்கொண்டது. அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், உடனடியாக அங்கு விரைந்து சென்று இரவு முழுவதும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் பலனாக நேற்று அதிகாலையில் 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் இமாசல பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.