தீர்த்தஹள்ளியில் துங்கா ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
தீர்த்தஹள்ளியில் துங்கா ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா பொம்மரஅக்ரஹாரா பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் அஸ்வத் (வயது 16). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். இவன் சமீபத்தில் வெளிவந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அஸ்வத் நடன பயற்சிக்கு சென்றான். பின்னர் அங்கிருந்து தனது நண்பர்களுடன் ராம மண்டபம் அருகே உள்ள துங்கா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அவர்கள் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அஸ்வத் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள், அஸ்வத்தை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனாலும் அதற்குள் அஸ்வத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றி உடனடியாக அவனது நண்பர்கள் தீர்த்தஹள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த அஸ்வத்தின் உடலை நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்டனர். போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீர்த்தஹள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.