அடுத்த சட்டசபை தேர்தலில் விஜயேந்திரா போட்டியிட்டு வெற்றி பெறுவார்- சித்தராமையாவுக்கு, எடியூரப்பா பதிலடி

அடுத்த சட்டசபை தேர்தலில் விஜயேந்திரா போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2022-06-08 21:55 GMT

பெங்களூரு: அடுத்த சட்டசபை தேர்தலில் விஜயேந்திரா போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

எடியூரப்பா தோல்வி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனான விஜயேந்திராவுக்கு, கர்நாடக மேல்-சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பா.ஜனதா மேலிடம் மீது எடியூரப்பாவும், விஜயேந்திராவும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், மேல்-சபை தேர்தலில் தனது மகனுக்கு டிக்கெட் பெற்று கொடுப்பதில் எடியூரப்பா தோல்வி அடைந்து விட்டதாகவும், பா.ஜனதாவில் இருந்து எடியூரப்பா ஓரங்கட்டப்படுவதாகவும் எதிர்ககட்சி தலைவர் சித்தராமையா கூறி இருந்தாா்.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் போட்டி

கர்நாடக மேல்-சபை தேர்தலில் விஜயேந்திராவுக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன் காரணமாக மேல்-சபை தேர்தலில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.


அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜயேந்திரா போட்டியிடுவார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் இருந்து எனக்கு எந்த விதமான சான்றிதழும் தேவையில்லை. பா.ஜனதாவில் எனக்கு கிடைத்த பதவிகள், வேறு யாருக்கும் கிடைத்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்