கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-சபை நடவடிக்கைகள் முடங்கின

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மரியாதை செலுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியது தொடா்பாக கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.

Update: 2023-07-19 18:45 GMT

பெங்களூரு:-

அரசு மரியாதை

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 13-வது நாள் கூட்டம் பெங்களூருவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் காலை 10.45 மணியளவில் தொடங்கியது. அப்போது பா.ஜனதா உறுப்பினர் ஆர்.அசோக் எழுந்து, 'காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பெங்களூருவில் நடத்தியது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த அரசியல் தலைவர்களை வரவேற்க விதிமுறைகளை மீறி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அனுப்பி வரவேற்றுள்ளது. சிறையில் இருந்தவர்கள், ஜாமீனில் இருந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சி அல்ல

மேலும் அந்த அதிகாரிகளை கூட்டம் நடைபெற்ற நுழைவு வாயில் பகுதியில் காவலாளிகள் போல் நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறு 30 அதிகாரிகளை இந்த காங்கிரஸ் அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். இது அரசு நிகழ்ச்சி அல்ல. அரசியல் நிகழ்வுகளுக்கு 7 கோடி கன்னடர்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக் கூடாது. அரசியல் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அதிகாரிகளை அழைத்து சென்றது தவறு. இது குற்றம்' என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல், 'ஆர்.அசோக் மூத்த தலைவர். இல்லாத குற்றச்சாட்டுகளை இங்கே கூறுவது தவறு. அரசியல் தலைவர்களை வரவேற்று அவர்களை ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதாக கூறுவதில் உண்மை இல்லை. வெளிமாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள், மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகளுக்கு விதிமுறைகளின் படி என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அந்த மரியாதையை கொடுத்துள்ளோம்.

பிரமுகர்களுக்கு பாதுகாப்பு

நாங்கள் விதிமுறைகளை மீறவில்லை. எங்கள் கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பற்றாக்குறை இல்லை. எங்கள் தலைவர்களுக்கு அதிகாரிகளின் மரியாதை தேவை இல்லை. நாங்கள் அதிகாரிகளை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. நாட்டின் 26 கட்சிகள் ஒன்றுகூடி கூட்டணி அமைத்துள்ளதை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை' என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார், 'உங்கள் ஆட்சி காலத்திலும் அரசியல் கூட்டங்களுக்கு அதிகாரிகள் சென்ற உதாரணங்கள் உண்டு என்று மந்திரி கூறினார். இது சரியல்ல. தலைமை செயலாளர், அதிகாரிகளை அனுப்ப மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும். முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு தனியார் மூலம் நீங்கள் மரியாதை அளித்து இருக்க வேண்டும். பிரமுகர்களின் வரவேற்புக்கு காங்கிரஸ் கட்சி செலவு செய்ததோ அல்லது இந்த அரசு செய்ததோ தெரியவில்லை' என்றார்.

வீட்டு வேலை இல்லை

அதைத்தொடர்ந்து மீண்டும் பேசிய மந்திரி எச்.கே.பட்டீல், 'இதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்' என்றார். அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர் சுனில்குமார் பேசும்போது, 'அரசியல் கூட்டத்திற்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்தியதற்காக முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும். இது உங்களின் வீட்டு வேலை இல்லை' என்றார்.

இதற்கு ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குரலை உயர்த்தி பேசியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் யு.டி.காதர், 'நீங்கள் எழுப்பிய பிரச்சினைக்கு அரசு பதிலளித்துள்ளது. அதனால் அடுத்த நிகழ்வை நடத்த ஒத்துழைக்க வேண்டும். இது பற்றி மேலும் விவாதிக்க விரும்பினால் எனக்கு கடிதம் கொடுங்கள். அதுபற்றி விவாதிக்க நான் அனுமதி அளிக்கிறேன்' என்றார்.

கடும் வாக்குவாதம்

அப்போது ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் உண்டாகி கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் சபையில் கடும் அமளி உண்டானது. இதையடுத்து பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து சபாநாயகர் யு.டி.காதர் சபையை ஒத்திவைத்தார்.

அதன்பிறகு சபை மீண்டும் 1 மணிக்கு கூடியது. சபை கூடியதும் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்களும் தர்ணாவில் பங்கேற்றனர். அவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதற்கிடையே முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

ராஜமரியாதை

பெங்களூருவில் அரசியல் கூட்டம் முதல் முறையாக நடைபெறவில்லை. இதற்கு முன்பு பல முறை இத்தகைய கூட்டங்கள் நடைபெற்றன. அப்போது எல்லாம் எந்த தவறும் நடக்கவில்லை. அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தி தகுதியற்றவர்களுக்கு அரசு மரியாதை வழங்கியுள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை 'குமாஸ்தா' போன்று பயன்படுத்துவது சரியல்ல.

காங்கிரஸ் அரசின் செயலால் கர்நாடகத்தின் மரியாதையே போய்விட்டது. அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகத்தின் மரியாதையை ஏலம் விடுகிறது. சிறு கட்சிகளின் தலைவர்களுக்கு ராஜமரியாதை வழங்குவது என்ன நியாயம்?.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

ஆவணங்கள் கிழிப்பு

எதிர்க்கட்சிகளின் தர்ணா போராட்டத்திற்கு இடையே பல்வேறு மந்திரிகள் மசோதாக்களை தாக்கல் செய்தனர். அந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த ஆவணங்களின் நகல்களை கிழித்து சபாநாயகரின் இருக்கையை நோக்கி வீசினர். அப்போது அதில் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சபையை மதியம் 3 மணிக்கு துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்