கர்நாடகத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு-முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கலபுரகி: கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கூட்டுறவு வாரம்
கர்நாடக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வாரம் தொடக்க விழா கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு கூட்டுறவு வாரத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கூட்டுறவு வங்கிகள் ஏக்கருக்கு எவ்வளவு தொகையை கடனாக வழங்க வேண்டும் என்பதை கூட்டுறவு வங்கிகளே முடிவு செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகள் மீட்டர் வட்டி சுழலில் சிக்காமல் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். விவசாயத்துறைக்கு அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ காப்பீடு
கூட்டுறவு வங்கி உறுப்பினர்களின் நலனுக்காக யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதில் தகுதியானவர்கள் தங்களின் பெயர்களை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு வித்யா நிதி திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளை முழுமையாக கணினிமயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அரசின் திட்ட மானியங்களை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும். இதற்காக அரசு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகள் பொருளாதார ரீதியாக பலம் பெறாத வரை நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும்.
உதவ வேண்டும்
விவசாயிகள் வித்யா நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் 16 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை பொருளாதார, சமூக, கல்வி ரீதியாக வளர்ந்து வருகிறது. ஜனநாயகத்தின் கீழ் செயல்படும் இந்த கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்த மத்திய அரசு முதல் முறையாக கூட்டுறவு துறையை உருவாக்கியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் உதவ வேண்டும்.
இந்த விழாவில் மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா, தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.