சிவமொக்காவில் திறந்த வாகனத்தில் அமித்ஷா ஊர்வலம்

சிவமொக்காவில் திறந்த வாகனத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஊர்வலம் நடத்தினார்.

Update: 2023-05-02 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்காவில் திறந்த வாகனத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஊர்வலம் நடத்தினார். முன்னதாக கடைகளை போலீசார் அடைத்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா(மாவட்டம்) டவுனில் நேற்று முன்தினம் மாலையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தினார். முன்னதாக இந்த ஊர்வலம் 5 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இரவு 7 மணிக்கு தான் ஊர்வலம் தொடங்கியது.

இரவு நேரம் ஆனதால் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த வாகனத்தை புறக்கணித்துவிட்டு, வேறொரு வாகனத்தை வரவழைத்து அதில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஊர்வலம் நடந்தது. சிவமொக்கா பி.எச்.சாலை சிவப்பா நாயக்கா சதுக்கத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஏ.ஏ.சதுக்கம், நேரு சாலை, ஜெயில் சதுக்கம் வ்ழியாக சுதந்திர பூங்கா திடலை சென்றடைந்தது.

திறந்த வாகனத்தில் ஊர்வலம்

திறந்த வாகனத்தில் அமித்ஷாவுடன் சிவமொக்கா நகர தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சன்னபசப்பா, நாடாளுமன்ற உறுப்பினர் ராகவேந்திரா ஆகியோர் உடன் இருந்தனர். ஊர்வலத்தின் முடிவில் அமித்ஷா பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவமொக்கா மக்கள் என்னை அன்போடு உபசரித்து வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்டோர் கர்நாடகத்தில் பா.ஜனதா வளர பாடுபட்டுள்ளனர்.

பா.ஜனதா ஆட்சி

அவர்களை நீங்கள்(மக்கள்) ஆதரித்தது போன்று வேட்பாளர் சன்னபசப்பாவையும் ஆதரிக்க வேண்டும். அவரை வெற்றிபெற செய்து மீண்டும் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷா வருகையையொட்டி நேற்று முன்தினம் மதியம் முதல் பல்வேறு இடங்களில் சிவமொக்கா டவுனில் போலீசார் குவிக்கப்பட்டனர். முக்கியமான பகுதிகளில் மதியம் முதல் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதிப்பு

சிவமொக்கா டவுனில் முக்கியமான வியாபார பகுதியான காந்தி பஜார் நகர், நேரு சாலை, பி.எச்.சாலை போன்ற பகுதிகளில் போலீசார் மதியம் முதலே கடைகளை அடைக்கச் செய்தனர். வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்தனர். இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்