சென்னகிரியில்காட்டு யானை தாக்கி இளம் பெண் சாவு
சென்னகிரியில் காட்டு யானை தாக்கி இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
சிக்கமகளூரு-
சென்னகிரியில் காட்டு யானை தாக்கி இளம்பெண் உயிரிழந்தார். அவரது தாய் படுகாயம் அடைந்தார்.
காட்டு யானை விரட்டியது
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா சோமலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 42). இவரது மகள் கவனா (17). இந்த நிலையில் நேற்று அதிகாலை மஞ்சுளாவும், கவனாவும் வனப்பகுதியையொட்டி உள்ள தங்கள் விளைநிலத்துக்கு சென்று பட்டாணி பறித்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி விளைநிலத்துக்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் மஞ்சுளாவும், அவரது மகள் கவனாவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது காட்டு யானை அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று தும்பிக்கையால் தூக்கி வீசியது.
இளம்பெண் சாவு
பின்னர் காட்டு யானை அவர்கள் 2 பேரையும் காலால் மிதித்தது. இதனால் அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காட்டு யானையை மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் விரட்டியடித்தனர். இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
யானை தாக்கியதில் கவனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ேமலும் மஞ்சுளா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்கள் பீதி
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சென்னகிரி போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கவனாவின் உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினரை சூழ்ந்து கொண்டு தங்கள் கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம் நிரந்தரமாக உள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை தாக்கி உயிரிழந்த கவனாவின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை ஏற்ற வனத்துறையினர், கவனாவின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். காட்டு யானை அட்டகாசத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் இதுகுறித்து சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.