உப்பள்ளியில் தொழில் அதிபர்களிடம் ரூ.19½ லட்சம் மோசடி
உப்பள்ளியில் தொழில் அதிபர்களிடம் மர்ம நபர்கள் ரூ.19½ லட்சம் மோசடி செய்துள்ளனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
உப்பள்ளி-
உப்பள்ளியில் தொழில் அதிபர்களிடம் மர்ம நபர்கள் ரூ.19½ லட்சம் மோசடி செய்துள்ளனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ரூ.18 லட்சம் மோசடி
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த இஸ்லாம்பூர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சுலாம் மொய்தீன். தொழில் அதிபரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நாங்கள் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களிடம் செலுத்தும் பணத்திற்கு இரண்டு மடங்கு பணம் தருகிறோம் என்று கூறினார்.
இதை நம்பிய சுலாம் மொய்தீன் ரூ.18 லட்சம் வரை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தினார். அந்த பணத்தை வாங்கி கொண்ட மர்ம நபர்கள் அதன் பின்னர் சுலாம் மொய்தீனை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுலாம் மொய்தீன், மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
சைபர் கிரைமில் புகார்
அப்போது அவர்களது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் இது குறித்து உப்பள்ளி-தார்வார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் ேபரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஐதராபாத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், பெலகாவியை சேர்ந்த அக்கி ஆலூர் ஆகியோர் மோசடி செய்திருப்பதாக தெரியவந்தது. அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ரூ.1.40 லட்சம் அபேஸ்
இதேபோல உப்பள்ளியை அடுத்த மண்டூர் ரோட்டை அடுத்த பிரியதர்ஷனி காலனியை சேர்ந்தவர் சாருக் முல்லா. இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அனைத்து விவரங்களை பெற்றனர். பின்னர் அந்த விவரங்களை வைத்து, சாருக் முல்லாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.40 லட்சம் எடுத்தனர். இது குறித்து உப்பள்ளி-தார்வார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.