ராய்ச்சூர் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
ராய்ச்சூர் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ராய்ச்சூரில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-ராய்ச்சூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ராய்ச்சூரில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கலபுரகியில் ஜவுளி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ராய்ச்சூரிலும் ஜவுளி பூங்கா தொடங்குவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது. துமகூரு மாவட்டம் சிராவில் நடந்த கோர விபத்தில் ராய்ச்சூரை சேர்ந்த 9 பேர் பலியாகி இருந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக நிமான்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசை ஏற்கும். ராய்ச்சூர் மாவட்டத்திற்கு மந்திரிசபையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றாலும், வரும் நாட்களில் அதுபற்றி உரிய முடிவு எடுக்கப்படும். ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து டெல்லிக்கு சென்ற போது மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து பேசினேன். மத்திய மந்திரியும், பிரதமர் மோடியுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.