கட்சி உடைந்த நிலையில் சரத்பவார்- அஜித்பவார் அணி இன்று போட்டி கூட்டம்

கட்சி உடைந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளும் இன்று போட்டிக்கூட்டம் நடத்துகின்றன. இதில் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்பது தெரியவரும்.

Update: 2023-07-04 23:11 GMT

பா.ஜனதா அரசுக்கு அஜித்பவார் ஆதரவு

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு பல அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருந்த பா.ஜனதா-சிவசேனா கூட்டணி முதல்-மந்திரி பதவியை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலால் உடைந்தது. கொள்கைகள் முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை அமைத்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மலர்ந்தது.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே, அதீதி தட்காரே, ஹசன் முஷ்ரிப், உள்ளிட்ட 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். மராட்டிய அரசியலில் நடந்த இந்த திடீர் மாற்றம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகுதி நீக்க நடவடிக்கை

ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். மேலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

இதேபோல மந்திரி பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.

இதேபோல அஜித்பவார் தரப்பும் சரத்பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை நீக்கி, அவருக்கு பதிலாக மாநில தலைவராக சுனில் தட்காரேயை நியமித்தது. மேலும் ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளது.

சபாநாயகர் விளக்கம்

தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறிவருகிறது. இதேபோல பதவி ஏற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அணியில் இருப்பதாக சரத்பவார் அணி கூறியுள்ளது. எனினும் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற விவரம் தெரியாமல் உள்ளது.

இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் நேற்று கூறுகையில், "அஜித்பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. கட்சி உடைந்தது தொடர்பாகவும் யாரும் மனு கொடுக்கவில்லை. அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜெயந்த் பாட்டீல் மனு கொடுத்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை" என்றார்.

யாருக்கு ஆதரவு அதிகம்?

அஜித்பவாருக்கு மூத்த தலைவர்களான சகன்புஜ்பால், திலீப் வால்சே பாட்டீல், ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே, பெண் எம்.எல்.ஏ. சரோஜ் அகிரே உள்பட 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல சரத்பவாருக்கு ஆதரவாக ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், ரோகித் பவார், ராஜேஸ் தோபே, அனில் தேஷ்முக், பாலாசாகேப் பாட்டீல் உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. 15 எம்.எல்.ஏ.க்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று தெரியும்

இந்தநிலையில் சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்குகின்றனர். இருவரும் தனிதனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சரத்பவார் நடத்தும் கூட்டம் மதியம் 1 மணிக்கு ஒர்லியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி., மாவட்ட பொறுப்பாளர்கள், தலைவர்கள், செயல் தலைவர்கள், தாலுகா, நகர, மண்டல தலைவர்கள், மாநில அணித்தலைவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அஜித்பவார் நடத்தும் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில தலைவர் சுனில் தட்காரே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

இன்று நடைபெற உள்ள இரு அணிகளின் கூட்டங்கள் மூலம் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவர உள்ளது. கூட்டம் முடிந்த பிறகு பலம் அதிகம் உள்ள அணிகள் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்