ஒரே நாளில் 2 நகைக்கடைகளில் புகுந்து ரூ.3¾ லட்சம் நகை-பணம் திருட்டு

ஹெப்ரி டவுனில், ஒரே நாளில் 2 நகைக்கடைகளில் புகுந்து ரூ.3¾ லட்சம் நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-15 19:00 GMT

மங்களூரு;

நகைக்கடைகளில் திருட்டு

உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா ஹெப்ரி டவுன் மார்க்கெட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வணிக வளாகம் அருகே நகைக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் மர்மநபர்கள், நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து காலை கடையின் உரிமையாளர் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பாா்த்த போது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தங்கநகைகள் திருட்டு போய் இருந்தது. திருட்டுபோன நகைகளின் மொத்தமதிப்பு ரூ.3¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதேபோல் நேற்றுமுன்தினம் குச்சூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையிலும் திருட்டு சம்பவம் நடந்து இருந்தது. இந்த கடையில் இருந்து ரூ.3,750 ரொக்கம் திருடப்பட்டது. இதுகுறித்து இரு நகைக்கடைகளின் உரிமையாளர்கள் ஹெப்ரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தகவல் அறிந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சித்தலிங்கப்பா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்கள் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடைகளில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சோதனை செய்தனர். இதுகுறித்து ஹெப்ரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்