மண்டியா மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது செல்போன்கள் எடுத்துவர தடை

மண்டியா மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் பணியாளர்கள் செல்போன்கள் எடுத்து வர தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-08 18:45 GMT

மண்டியா-

மண்டியா மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் பணியாளர்கள் செல்போன்கள் எடுத்து வர தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல்

மண்டியா மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோபாலகிருஷ்ணா நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கான ஓட்டுப்பதிவு வருகிற 10-ந் தேதி(நாளை) நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 13-ந் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மண்டியா டவுனில் உள்ள அரசு விஸ்வவித்யாலயா கலைக்கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை அமைதியாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் நடைபெற வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

ஓட்டு எண்ணிக்கை

ஓட்டு எண்ணிக்கை அன்று வாக்கு எண்ணும் மையத்தில் காலை 6 மணிக்கே அனைத்து பணியாளர்களும் ஆஜராக வேண்டும். அவ்வாறு 6 மணிக்குள் வராதவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முறை தபால் ஓட்டுக்களை எண்ணுவதற்கு பிரத்யேகமாக ஒரு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முறை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3,261 பேர் வீட்டில் இருந்தே தங்கள் வாக்குகளை தபால் ஓட்டு மூலம் செலுத்தி இருக்கிறார்கள். மேலும் அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் என மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 674 தபால் ஓட்டுகள் போடப்பட்டு உள்ளன.

தபால் ஓட்டுக்களை எண்ணி முடித்த பிறகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் ஊழியர்கள் காலை 7.15-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளுக்கு சென்றுவிட வேண்டும்.

செல்போன்களுக்கு தடை

வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன், அதிநவீன செல்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச் செல்லலாம். மேலும் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்