குடகில் நகைக்கடைகளில் பர்தா அணிந்து திருடிய 2 பெண்கள் கைது

குடகில் நகைக்கடைகளில் பர்தா அணிந்து திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் 2 பேரும் சிக்கினர்.

Update: 2023-07-10 18:45 GMT

குடகு-

குடகில் நகைக்கடைகளில் பர்தா அணிந்து திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் 2 பேரும் சிக்கினர்.

தங்க நகைகள் திருட்டு

குடகு மாவட்டம் குஷால்நகர் ஐ.பி. சாலையில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நகைக்கடைக்கு 2 பெண்கள் பர்தா அணிந்து வாடிக்கையாளர்கள் போல வந்தனர். அவர்களுக்கு நகைக்கடை ஊழியர்கள் தங்க நகைகளை எடுத்து காண்பித்தனர். நகைகளை பார்த்த 2 பெண்களும், அவை பிடிக்கவில்லை என சிறிது நேரத்தில் சென்றுவிட்டனர். இதையடுத்து ஊழியர் தங்க நகைகளை சரி பார்த்தார். அப்போது 45 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் போல வந்த பெண்கள் தான் கைவரிசை காட்டியது என தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவிலும் அந்த பெண்கள் தங்க நகைகளை திருடியது பதிவாகி இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குஷால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பெண்கள் கைது

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் 2 பெண்களையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்கள், சித்ரதுர்காவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சித்ரதுர்காவுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சித்ரதுர்காவை சேர்ந்த கைரோன், ஜெய்ரோன் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் பர்தா அணிந்து நகைக்கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் போல சென்று தங்க நகைகளை திருடி வந்தது தெரியவந்தது. குஷால்நகர் ரத வீதியில் உள்ள நகைக்கடையிலும் அவர்கள் கைவரிசை காட்டியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்