இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா
தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 588 பேர் குணம் அடைந்தனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500-க்குள் அடங்கி வருகிறது. நேற்று முன்தினம் 224 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 90 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 588 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 54 ஆயிரத்து 496 ஆகும். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 281 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,222 ஆக குறைந்துள்ளது.
தொற்றால் நேற்று முன்தினம் ஒருவர் மட்டுமே பலி ஆன நிலையில், நேற்று 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 1-ஐக் கணக்கில் சேர்த்தனர். அங்கு மேலும் ஒருவர் இறந்தார். பஞ்சாபிலும் தொற்றால் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதுவரை தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை என்பது 5 லட்சத்து 31 ஆயிரத்து 870 ஆக அதிகரித்து இருக்கிறது.