சிவமொக்கா பா.ஜனதா அலுவலகம் முன்பு ஈசுவரப்பா ஆதரவாளர்கள் போராட்டம்

சிவமொக்கா பா.ஜனதா அலுவலகம் முன்பு ஈசுவரப்பா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-12 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா பா.ஜனதா அலுவலகம் முன்பு ஈசுவரப்பா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடகாவில் சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (மே) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந்தேதி நடக்கிறது. இந்தநிலையில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இதேப்போல் காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக 166 வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டு உள்ளது. இந்தநிலையில் பா.ஜனதா கட்சி 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நேற்று முன்தினம் அறிவித்தது. அதில் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 6 தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு உள்ளது. சிவமொக்கா தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை. இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈசுவரப்பா. இவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பணியாற்றி வந்தார். ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை விவகாரத்தில் ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அரசியலில் இருந்து விலகல்

இதையடுத்து ஈசுவரப்பா அரசியலை விட்டு விலகுவதற்கு தயாரானார். ஆனால் கட்சி மேலிடம் கூறியதை அடுத்து அவா் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தன்னுடன் தனது மகனுக்கும் டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் பா.ஜனதா, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்று உறுதியாக கூறியது.

இந்த நிலையில் ஈசுவரப்பா தேர்தல் மற்றும் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விலகல் கடிதத்தை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவமொக்கா டவுனில் உள்ள ஈசுவரப்பா வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் ஈசுவரப்பா அரசியலில்  இருந்து விலக கூடாது என கோஷம் எழுப்பினர். மேலும் ஆதரவாளர்கள் சாலை மறியல் மற்றும் டயரை தீ வைத்து எரித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

பரபரப்பு

இந்தநிலையில் நேற்று குவெம்பு சாலையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு ஈசுவரப்பா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஈசுவரப்பாவுக்கு பா.ஜனதா கட்சி அநீதி வழங்கியதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்