தட்சிண கன்னடாவில் மத கலவரத்தை தடுக்கசிறப்பு போலீஸ் படை அமைப்பு போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் பேட்டி

தட்சிண கன்னடாவில் மத கலவரத்தை தடுக்க சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-15 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடாவில் மத கலவரத்தை தடுக்க சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

காதல் ஜோடிகள் மீது தாக்குதல்

தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சோமேஸ்வர் கடற்கரைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 காதல் ஜோடிகள் வந்திருந்தனர். அதாவது இந்து வாலிபர்கள், முஸ்லிம் இளம் பெண்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இது குறித்து தகவல் அறிந்து இந்து அமைப்பினர் சிலர் அந்த இடத்திற்கு சென்று காதல் ஜோடிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து காதல் ஜோடிகள் உல்லால் போலீசில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் மங்களூரு வந்திருந்த போலீஸ் மந்திரி பரமேஸ்வர், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு உடனே போலீசாரை அழைத்து மத கலவரத்தை தூண்டும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் இதற்காக சிறப்பு போலீஸ் படை ஒன்றை அமைக்கும்படியும் உத்தரவிட்டார். அதன்படி தட்சிண கன்னடா போலீசார் மத கலவரம் மற்றும் நகரில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க சிறப்பு போலீஸ் படையை அமைத்துள்ளனர்.

சிறப்பு போலீஸ் படை

இது குறித்து மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மத கலவரங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மத கலவரத்தை தடுக்கவேண்டும் என்றால், அதற்கு சிறப்பு போலீஸ் படை அமைத்து ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் மந்திரியும் சிறப்பு போலீஸ் படை அமைக்கும்படி கூறியிருந்தார். அதன்படி சிறப்பு போலீஸ் படையை அமைத்துள்ளோம்.

இந்த சிறப்பு போலீஸ் படையில், 5 முதல் 6 உயர் போலீஸ் அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். முதற்கட்டமாக இவர்கள் நகரில் நடந்த மத கலவரம், கொலை, வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது, கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்பியது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்க உள்ளோம். அதாவது 10 ஆண்டுகளில் நடந்த மத கலவரம் குறித்த விவரங்களை சேகரித்துள்ளது.

200 வழக்குகள் குறித்து விசாரணை

அதன்படி இதுவரை மத கலவரம் மற்றும் கொலை, கொள்ளை என 200 வழக்குகளை கையில் எடுத்துள்ளனர். அந்த வழக்குகள் குறித்து சிறப்பு போலீஸ் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இனி வரும் நாட்களில் மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்