தட்சிண கன்னடாவில் முன்னாள் மந்திரிகள் வேட்புமனு தாக்கல்
தட்சிண கன்னடாவில் முன்னாள் மந்திரிகள் உள்பட பலர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடாவில் முன்னாள் மந்திரிகள் உள்பட பலர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல்
கர்நாடகத்திற்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்கலை தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று இறுதி நாள் என்பதால் கடந்த 2 நாட்களாக வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அதன்படி மங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் டாக்டர் பரத் செட்டி நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் இனாயத் அலி மங்களூரு தாலுகாவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மங்களூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் யு.டி.காதர் நேற்று உல்லால் நகரசபை அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக அவர் பிரம்மஸ்ரீ நாராயண குரு கோவில் மற்றும் ரத்தேஷ்வரி கோவில், செபஸ்டியன் தேவாலயத்தில் தரிசனம் செய்துவிட்டு, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஜனார்த்தன பூஜாரியிடம் வாழ்த்து
இவரை எதிர்த்து போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் சதீஷ் கும்பலா உல்லால் நகரசபையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பண்ட்வால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் மந்திரி ரமநாத் ராய், பி.சி.ரோட்டில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தன பூஜாரியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதேபோல புத்தூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும், திம்மப்பா கவுடா நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல சுயேச்சைகள் மற்றும் பலர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.