உயர் அதிகாரிகளுடன், போலீஸ் கமிஷனர் ஆலோசனை
பெங்களூருவில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு:-
போலீஸ் கமிஷனர் ஆலோசனை
பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொணடாட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பெங்களூரு நகரவாசிகள் தயாராகி வருகின்றனர். ஓட்டல்கள் அதிகாலை வரை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை...
குறிப்பாக புத்தாண்டுக்கு முந்தைய நாளான வருகிற 31-ந் தேதி இரவு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச்தெரு, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மக்கள் திரளுவார்கள் என்பதால், அங்கு எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும், எந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பெங்களூரு புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்கு வருபவர்களை கண்காணிப்பது எப்படி? என்பது குறித்தும் போலீஸ் கமிஷனர் ஆலோசித்தார்.
அதே நேரத்தில் ஓட்டல்கள், பப்கள், மதுபான விடுதிகளுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், நள்ளிரவு எவ்வளவு நேரம் திறந்திருக்க அனுமதி வழங்கலாம் என்பது குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், பிரதாப் ரெட்டி ஆலோசனை நடத்தினார். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார்.