சித்ரதுர்கா மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்களை 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
சித்ரதுர்கா மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர்சேதம் குறித்த விவரங்களை வருகிற 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் கவிதா மன்னிக்கேரி உத்தரவிட்டார்.
சிக்கமகளூரு;
மழைக்கு பயிர்சேதம்
சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் கவிதா மன்னிக்கேரி மழை பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளதாவது:-
சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களில் வருகிற 20-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, மாவட்டத்தில் மழை சேதத்தை ஆய்வு செய்து தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் தாலுகா நிர்வாகங்கள் மழை பாதிப்பு குறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை சேதம் குறித்து ராஜீவ் காந்தி வீட்டு வசதி இணையதளத்தில் பதிவு செய்து அரசு வழிகாட்டுதல்படி நிவாரணம் வழங்க வேண்டும். சித்ரதுர்கா மாவட்டத்தில் மழைக்கு ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து வருகிற 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏரிகளின் கரைகள்
சாலைகளின் சேதத்தின் தீவிரத்தை பொறுத்து 3 வகைகளாக பிரித்து சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும். 50 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ள ஏரிகளின் கரைகள் உறுதித்தன்மையை பரிசோதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் பலவீனமான கரைகளில் மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்த வேண்டும். மழைக்கு சேதமடைந்த மின்கம்பம், மின்மாற்றிகளை உடனே சீரமைத்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.