சிக்கமகளூரு மாவட்டத்தில் மாடுகள் மற்றும் வளர்ப்பு நாய்களை சாலைகளில் விட்டால் நடவடிக்கை
சிக்கமகளூரு மாவட்டத்தில் மாடுகள் மற்றும் வளர்ப்பு நாய்களை சாலைகளில் விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாயத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கனபூர் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் ஒரு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் செய்து வந்தனர்.
அந்த பிரசாரத்தில், தினந்தோறும் மாடுகள், வளர்ப்பு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பாதசாரிகளை நாய்கள் கடித்து விடுகின்றன.
இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல பயப்படுகின்றனர். ஆகையால் இனி எக்காரணத்தை கொண்டும் மாடுகள் மற்றும் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் வீட்டிலேயே கட்டி போட்டு வளர்க்க வேண்டும்.
அதை மீறி சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் அதன் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும் போலீசில் புகார் அளிக்கப்படும். இவ்வாறு பஞ்சாயத்து அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தனர்.