சிக்கமகளூருவில், ரூ.1 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமுதாய பவன்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேச்சு

சிக்கமகளூருவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சமுதாய பவன் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-10-28 18:45 GMT

சிக்கமகளூரு;

நலத்திட்ட உதவிகள்

சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய பொது செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கலந்து கொண்டு குத்துவிளக்ேகற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் 50-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் பேசும்போது கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தற்போது செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் பயனடைந்து குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும். அவர்களுக்கு இன்னும் தேவையான உதவிகளை அரசு செய்ய உள்ளது. மேலும் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 584 மாற்றுத்திறனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களில் 13 ஆயிரத்து 354 பேருக்கு யு.ஏ.ஐ.டி. அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை

இதுபோன்ற அடையாள அட்டை வழங்கப்பட்டதில் மாநிலத்தில் சிக்கமகளூரு மாவட்டம் 2-வது இடத்தில் இருக்கிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் 623 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான கருவிகள் வழங்க முடிவு செய்து அதில் 325 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்திற்கு ரூ.1,400 வீதம் உதவித்தொகை வழங்கி வருகிறது. விரைவில் சிக்கமகளூருவில் ஒரு சமுதாய பவன் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டி கொடுப்பதற்கு சட்டசபையில் தீர்மானித்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சமுதாய பவன்

இதில் முதற்கட்டமாக ரூ.40 லட்சம் வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. விரைவில் இடம் பார்த்து மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு சமுதாய பவனை கட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு, நகரசபை தலைவர் வேணுகோபால், நகர வளர்ச்சி தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்