இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் விஷயத்தில் பழங்குடி சமூகத்திற்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்- போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு

இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் விஷயத்தில் பழங்குடி சமூகத்திற்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.

Update: 2022-08-30 16:49 GMT

பெங்களூரு: இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் விஷயத்தில் பழங்குடி சமூகத்திற்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.

போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பின்வாங்க மாட்டேன்

கர்நாடகத்தில் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக நீதிபதி நாகமோகன்தாஸ் மற்றும் நீதிபதி சுபாஷ் ஆதி ஆகியோர் வழங்கிய அறிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இந்த விஷயத்தில் பழங்குடி சமூகத்திற்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இட ஒதுக்கீடு குறித்து நான் முன்பு கூறிய வாக்குறுதியில் இருந்து ஒரு அடி கூட பின்வாங்க மாட்டேன்.

பழங்குடி சமூகத்திற்கு தற்போது 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை 7½ சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அந்த சமூகத்தினர் கேட்கிறார்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்ற நான் பாடுபடுவேன். இந்த விஷயத்தில் நான் உறுதியாக உள்ளேன். சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையில் இன்னொருவரை ஒழித்துவிட்டு மேலே வந்தவர்.

ரூ.400 கோடி ஊழல்

அவர் பொய் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சித்தராமையா சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று என்பது அனைவருக்கும் தெரியும். அர்க்காவதி லே-அவுட் விஷயத்தில் ரூ.400 கோடி வரை ஊழல் நடைபெற்றது.

அதனால் சித்தராமையாவுக்கு ஊழலுக்கு எதிராக பேச தகுதி இல்லை. 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வரை கொரட்டகெரே தொகுதியில் தோற்கடித்தவர் யார்?.

இவ்வாறு ஸ்ரீராமுலு குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்