சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறை முன் ஆஜர்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆஜரானாா்.
பெங்களூரு:
டி.கே.சிவக்குமாருக்கு சம்மன்
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த வாரம் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. கா்நாடக சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடப்பதால் டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராவேன் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
விசாரணைக்கு ஆஜரானார்
இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நேற்று மதியம் 12 மணியளவில் டெல்லியில் உள்ள அப்துல்கலாம் ரோட்டில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜரானார்.
அப்போது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிரான ஆவணங்களை அவர் அதிகாரிகளிடம் வழங்கியதாக தெரிகிறது. 1½ மணிநேரம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர் மதியம் சாப்பிடுவதற்கு டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி வழங்கினாா்கள்.
பேட்டியளிக்க மறுப்பு
அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். பின்னர் மதியம் சாப்பிட்டுவிட்டு டி.கே.சிவக்குமார் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நேற்று இரவு வரை அமலாக்கத்துறை அதிகாாிகள் விசாரணை நடத்தினாா்கள்.
சட்டவிரோத பண பரிமாற்றம் சம்பந்தமாக அவரிடம் விரிவான விசாரணை நடைபெற்றிருந்தது. டி.கே.சிவக்குமார் இருமல், லேசான காய்ச்சலால் அவதிப்படுகிறார். அப்படி இருந்தும் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.