கார் மோதியதில் முன்பகுதியில் சிக்கிய முதியவரை 8 கி.மீ இழுத்துச் சென்ற கொடூரம் - உடல் நசுங்கி பலி

பீகாரில் முதியவர் மீது கார் மோதி, காரின் முன்பகுதியில் சிக்கிய அவரை எட்டு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-01-22 12:33 GMT

பாட்னா,

பீகாரில் முதியவர் மீது கார் மோதி, காரின் முன்பகுதியில் சிக்கிய அவரை எட்டு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 27-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. பலியானவர் கோட்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாங்க்ரா கிராமத்தில் வசிக்கும் சங்கர் சவுதூர் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சைக்கிளில் வந்த அந்த முதியவர் பாங்க்ரா சவுக் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, கோபால்கஞ்ச் நகரில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது. இதையடுத்து காரின் முன்பகுதியில் தூக்கி எறியப்பட்ட அவர் வைப்பரைப் பிடித்து கொண்டு தொங்கினார். தொடர்ந்து சத்தம் போட்டு காரை நிறுத்துமாறு கெஞ்சினார். சுற்றி சாலையில் இருந்தவர்களும் காரை நிறுத்துமாறு பின்தொடர்ந்து சென்று கத்தினர்.

ஆனால் அந்த நபர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக சென்றார். காரைப் பின்தொடர்ந்து மக்கள் வருவதைக் கண்ட அவர், கோட்வாவில் உள்ள கடம் சவுக் அருகே பிரேக் அடித்தார். இதையடுத்து காரிலிருந்து சங்கர் சவுதூர் கீழே விழ, அவர் மீது கார் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை 27-ல் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. பிப்ரகோதி போலீசார் காரை கைப்பற்றினர், ஆனால் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். கார் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்