பத்ராவதியில் பணத்தகராறில் வாலிபர் குத்தி கொலை

பத்ராவதியில் பணத்தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-23 18:45 GMT

சிவமொக்கா-

பத்ராவதியில் பணத்தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பணத்தகராறு

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா கோடிஹள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது28). இவரது நண்பர் அருண். அதே போல பத்ராவதியை அடுத்த சத்திய சாய் நகரை சேர்ந்தவர்கள் சதாத், சுஹேல். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்களில் நவீன்குமார், செல்போன் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஹேல் மற்றும் சதாத் 2 செல்போன்களை வாங்கினர். அதற்கு குறைந்த அளவே பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் நவீன் குமார், சுஹேலிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். அதற்கு சுஹேல் மற்றும் அவரது நண்பர் சதாத் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நவீன் குமார் மற்றும் சுஹேலுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நவீன் குமார், பணத்தை வாங்குவதற்காக நண்பர் அருணுடன் சத்திய சாய் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

கத்தியால் குத்தி கொலை

இதில் கோபமடைந்த சுஹேல் மற்றும் சதாத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீன் குமார், அருணை குத்த முயற்சித்தனர். அப்போது அருண் தப்பியோடிவிட்டார். நவீன் குமார் சிக்கி கொண்டார். அவரை மடக்கிய சுஹேல் மற்றும் சதாத், கத்தியால் சரமாரியாக குத்தினர். இந்த கத்தி குத்தில் பலத்த காயமடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த கொலை குறித்து அருண் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒசமனே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்