ரவுடியின் கூட்டாளிகளிடம் பணம்: பெங்களூருவில், 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

ரவுடியின் கூட்டாளிகளிடம் பணம் வாங்கியதாக பெங்களூருவில், 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-07-08 21:45 GMT

பெங்களூரு: ரவுடியின் கூட்டாளிகளிடம் பணம் வாங்கியதாக பெங்களூருவில், 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

பணம் வாங்கி கொண்டு விடுவிப்பு

தார்வார் சிறையில் பிரபல ரவுடியான பாம்பே சலீம் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்தபடியே பாம்பே சலீம், பெங்களூரு கலாசிபாளையா பகுதியில் வசிக்கும் தொழில் அதிபருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது எனது கூட்டாளிகள் வருவார்கள். அவர்களிடம் ரூ.8 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தொழில் அதிபர் வீட்டிற்கு சென்ற பாம்பே சலீமின் கூட்டாளிகள் 2 பேர் ரூ.8 லட்சம் பணம் கேட்டு மிரட்டிஉள்ளனர்.

இதுகுறித்து தொழில் அதிபர் கலாசிபாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் பாம்பே சலீமின் கூட்டாளிகள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரிடமும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேத்தன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா பணம் வாங்கி கொண்டு விடுவித்ததாக தெரிகிறது.

பணி இடைநீக்கம்

இதையடுத்து தொழில் அதிபரை தொடர்பு கொண்டு பாம்பே சலீம் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தொழில் அதிபர், சிறைத்துறை டி.ஜி.பி. அலோக் மோகனிடம் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டிக்கு, அலோக் மோகன் உத்தரவிட்டு இருந்தார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் சேத்தன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் பணம் வாங்கி கொண்டு பாம்பே சலீம் கூட்டாளிகளை விடுவித்தது தெரியவந்தது.

இதனால் அவர்கள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கும் மாற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து பாம்பே சலீமின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தார்வார் சிறையில் உள்ள பாம்பே சலீமையும் தங்களது காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்