பெங்களூருவில் ரூ.16,328 கோடியில் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் அமல்

பெங்களூருவில் ரூ.16,328 கோடி கோடி செலவில் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மெட்ரோ ரெயில் கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-11-18 21:49 GMT

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.16,328 கோடி கோடி செலவில் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மெட்ரோ ரெயில் கழகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3-வது கட்ட திட்டம்

பெங்களூருவில் 3-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு கர்நாடக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 44.65 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் 2 வழியில் அமல்படுத்தப்படுகிறது. ஒரு வழியில் ஜே.பி.நகர் 4-வது பேசில் இருந்து கெம்பாபுரா வரை 32.15 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மற்றொரு வழியில் ஒசஹள்ளி முதல் கடபகெரே வரை 12½ கிலோ மீட்டர் தூரத்திற்கும் பாதை அமைக்கப்படுகிறது.

முதல் பாதையில் அதாவது ஜே.பி.நகர்-கெம்பாபுரா பாதையில் ஜே.பி.நகர் 4-வது பேஸ், ஜே.பி.நகர் 5-வது பேஸ், ஜே.பி.நகர், கதிரேனஹள்ளி, காமாக்கிய சந்திப்பு, ஒசகெரேஹள்ளி, துவாரகா நகர், மைசூரு ரோடு, நாகரபாவி சர்க்கிள், விநாயகா லே-அவுட், பாப்பிரெட்டிபாளையா, பி.டி.ஏ. வளாகம் நாகரபாவி, சும்மனஹள்ளி கிராஸ், சவுடேஸ்வரிநகர், சுதந்திர போராட்ட தியாகிகள் காலனி, கன்டீரவா நகர், பீனியா, முத்யாலா நகர், பி.இ.எல். சர்க்கிள், நாகசெட்டிஹள்ளி, ஹெப்பால் ரெயில் நிலையம், கெம்பாபுரா ஆகிய இடங்களில் மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 31 ரெயில் நிலையங்கள் அமைகின்றன.

110 ஏக்கர் நிலம்

2-வது வழியில் அதாவது ஒசஹள்ளி முதல் கடபகெரே வரையிலான பாதையில் ஒசஹள்ளி, கே.எச்.பி. காலனி, காமாட்சிபாளையா, சும்மனஹள்ளி கிராஸ், சுங்கதகட்டே, ஹீரோஹள்ளி, பேடரஹள்ளி, காமத் லே-அவுட், கடபகெரே ஆகிய இடங்களில் ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரெயில் நிலைய பாதையில் ஜே.பி.நகரில் ஆர்6 நிலையம், ஜே.பி.நகர் நிலையம், பி.எம்.டி.சி. பஸ் நிலையம், மைசூரு ரோடு மெட்ரோ நிலையம், பீனியா மெட்ரோ ரெயில் நிலையம், லொட்டிகொல்லஹள்ளி ரெயில் நிலையம், ஹெப்பால் ரெயில் நிலையம், கெம்பாபுரா மெட்ரோ நிலையங்களுடன் "இன்டர்சேஞ்ச்" (இறங்கி மாறி செல்லும் சந்திப்பு) வசதி ஏற்படுத்தப்படுகிறது.

இந்த 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.16 ஆயிரத்து 328 கோடி செலவழிக்கப்படுகிறது. இந்த திட்ட நிதியில் மத்திய-மாநில அரசுகள் தலா 20 சதவீதம் வழங்கும். மீதமுள்ள 60 சதவீத நிதி கடனாக பெறப்படும். இந்த திட்டத்திற்கு மொத்தம் 110 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் அரசு நிலம் ஆகும். மீதம் தனியாரிடம் இருந்து வாங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்