பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்களை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்

பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2022-09-14 13:05 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், கே.ஆர்.புரம், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

குறிப்பாக 130-க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகள், 20-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழை பாதிப்பு ஏற்பட ஏரிகள் மற்றும் ராஜ கால்வாய் நிலங்கள் ஆக்கிரமிப்பே முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஏரி, ராஜ கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அதன்படி, கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றும் 2-வது நாளாக மகாதேவபுரா, எலகங்கா மண்டலங்களில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. மகாதேவபுராவில் உள்ள பாப்பிரெட்டிபாளையா, சாந்தி நிகேதன் லே-அவுட் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.

இந்த நிலையில், இன்று 3-வது நாளாக பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள பல ஐ.டி. நிறுவனங்களின் கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விப்ரோ, பிரஸ்டீஜ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு ஐ.டி நிறுவனங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் செய்திகள்