சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சிறுபான்மையினருக்கு 'டிக்கெட்' வழங்காதது ஏன்? சித்தராமையா கேள்வி

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு டிக்கெட் வழங்காதது ஏன்? என சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-05-03 18:45 GMT

உப்பள்ளி-

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு டிக்கெட் வழங்காதது ஏன்? என சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா காங்கிரஸ் கட்சி வேட்பாளர்ளை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் தார்வார் மாவட்டம் குந்துகோலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதி சிவள்ளியை ஆதரித்து பிரசாரம் செய்ய சித்தராமையா வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குந்துகோல் டவுனில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

லிங்காயத் முதல்-மந்திரியாக இருந்த பலர் நேர்மையானவர்களாக இருந்தனர். ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். பா.ஜனதாவினர் அரசியல் லாபத்திற்காக முஸ்லிம் சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை வாபஸ் பெற்று உள்ளனர். வருகிற சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு கூட 'டிக்கெட்' கொடுக்காதது ஏன்?. இது மதவாத அரசியல் ஆகும். இதுபோன்ற மதவாத கட்சிக்கு மக்கள் தயவு செய்து வாக்களிக்காதீர்கள்.

இடஒதுக்கீடு

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற உடனே தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு அதிகப்படுத்தபடும். முஸ்லிம் சமுதாய மக்களை ஏமாற்றிய பா.ஜனதா கட்சியை யாரும் நம்ப வேண்டாம். நான் (சித்தராமையா) 13 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளேன். அதன் மூலம் தகுந்த நிர்வாகத்தை செயல்படுத்தி உள்ளேன். எனவே வருகிற சட்டபை தேர்தலில் குந்துகோல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை பொதுமக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

பா.ஜனதா அரசு, காண்ட்ராக்டர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பினோம். ஆனால் அதற்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற மக்கள் ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்