என் மனைவிக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால்,நானும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்
என் மனைவிக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால், நானும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என எச்.டி.ரேவண்ணா ஆவேசமாக பேசியுள்ளார்.
பெங்களூரு-
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா ஹாசன் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக தன்னிச்சையாக அறிவித்தார். மேலும் அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தான் போட்டியிட இருப்பதாக கூறினார். இதற்கு தேவேகவுடாவின் 2-வது மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் ஹாசன் தொகுதியில் சுவரூப் என்பவருக்கு டிக்கெட் கொடுக்க இருப்பதாக கூறினார். இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணா மற்றும் குமாரசாமி ஆகிய 2 பேரையும் நேரில் அழைத்து தேவேகவுடா சமாதானம் செய்தார்.
இருப்பினும் ஹாசன் தொகுதியில் பவானி ரேவண்ணாவுக்கு டிக்கெட் கொடுக்க குமாரசாமி மறுத்து வந்தார். இந்த விஷயத்தில் அவர் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் எனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்காவிட்டால், நானும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனக்கும் டிக்கெட் வழங்க வேண்டாம்' என்று ஆவேசமாக கூறியுள்ளார். இது குமாரசாமி மற்றும் தேவேகவுடாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.