நர்சுகள் சிரித்த முகத்துடன் சேவையாற்றினால் பாதி நோய் தானாகவே குணமாகும்
நர்சுகள் சிரித்த முகத்துடன் சேவையாற்றினால் பாதி நோய் தானாகவே குணமாகிவிடும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:-
மாதிரி மருத்துவமனை
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பாக செயலாற்றி வரும் நர்சுகளுக்கு 'நைட்டிங்கேல்' விருது வழங்கும் விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு சிறந்த சேவையாற்றிய நர்சுகளுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:-
நான் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெறக்கூடிய வகையில் அரசு ஆஸ்பத்திரிகளை உருவாக்க வேண்டும். இதற்கு அரசுடன் சுகதாரத்துறை ஊழியர்கள் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டியது அவசியம். பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி ஒரு மாதிரி மருத்துவமனை.
மிகவும் புனிதமானது
அந்த ஆஸ்பத்திரியில் அரசியல்வாதிகள் அனைவரும் சிகிச்சை பெறுகிறார்கள். அத்தகைய தரமான சிகிச்சை, தூய்மை, ஒழுக்க முறை அந்த ஆஸ்பத்திரியில் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் பின்பற்றப்படும் முறைகளையே பிற ஆஸ்பத்திரிகளும் பின்பற்ற முடியும். இதற்கு நேர்மை மற்றும் சேவை மனப்பான்மை தேவை. செவிலியர் பணி மிகவும் புனிதமானது. நோயாளி
களுக்கு உடன் இருந்து கவனித்து கொள்பவர்கள் நர்சுகள். அவர்கள் சிரித்த முகத்துடன் சேவையாற்றினால் பாதி நோய் தானாகவே குணமாகிவிடும். தன்னம்பிக்கை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. நர்சுகளின் சேவை மனப்பான்மை மற்றும் சிரித்த முகம் ஆகியவை நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கின்றன. இதன் மூலம் நோயாளிகள் விரைவாக குணம் அடைகிறார்கள்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
விழாவில் நர்சுகள் ஜெமிமல் கிறிஸ்டோபர், பிரியதர்ஷினி, சசிகுமார், ஜான் மார்ஷல், புவனேஸ்வரி, பிரெசில்லா ரோட்ரிகஸ், பாரதி பட்டீல், எம்.எம்.ரதி, சைலஜா, ரேணுகா, கவிதா, சஞ்சய் பீராப்பூர் ஆகியோருக்கு 'நைட்டிங்கேல்' விருது வழங்கி சித்தராமையா கவுரவித்தார்.