தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்: மம்தா பானர்ஜி

தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் அருகே அமர்ந்து என்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவும் முடியும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2023-03-29 16:31 GMT


கொல்கத்தா,


மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு வங்காள மாநிலத்திற்கு, 100 நாட்கள் வேலைக்கான உரிய தொகையை தராமல் மத்திய அரசு நிறுத்தி விட்டது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூட எங்களுடைய மாநிலத்திற்கு என்று எதுவும் அளிக்கப்படவில்லை. அதனால், மேற்கு வங்காள மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து வருகிற 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் அம்பேத்கார் சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு எதிராகவும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் கொல்கத்தா நகரில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு மம்தா பானர்ஜி இன்று 2 நாள் தர்ணா போராட்டம் தொடங்கி உள்ளார்.

இதேபோன்று, ஜனநாயகம், கூட்டாட்சி முறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் அம்பேத்கார் சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டபோது பேசிய மம்தா பானர்ஜி, நான் திரிணாமுல் காங்கிரசின் தலைவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன். முதல்-மந்திரியாக அல்ல என்று கூறினார்.

தொடர்ந்து அவர், நான் மக்களுக்காக பணியாற்றுகிறேன். மக்களுக்காக போராடுகிறேன். 100 நாள் வேலைக்கு மத்திய அரசால் பணம் வழங்காமல் தடுக்கப்பட்டு உள்ள பொதுஜனத்தின் உரிமைகளுக்காக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன்.

தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் அருகே அமர்ந்து மம்தாவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவும் முடியும். எனக்கு அந்த தைரியம் உள்ளது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நீங்கள் பிரிவு 27 என கூறப்படும் ஒன்றை பயன்படுத்தி, இந்த நிதியை தடுத்து இருக்கிறீர்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், 2024-ம் ஆண்டில் பிரிவு 420-ன் கீழ் மக்கள் வாக்களித்து உங்களை வெளியேற்றி விடுவார்கள். நீங்கள் அதிகாரத்திற்கு வரமுடியாது என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்