சீனா சூப்பர்பவர் நாடானால்... மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

நமது அண்டை நாடான சீனா சர்வதேச அளவில் ஆற்றல் கொண்ட நாடாக மாறலாம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Update: 2023-01-29 05:33 GMT

புனே,



மராட்டியத்தின் புனே நகரில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் எழுதிய புத்தகம் ஒன்று மராத்தி மொழியில் பாரத் மார்க் (இந்தியாவின் வழி) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சீனா ஒரு வழக்கத்திற்கு மாறான அண்டை நாடு. நமக்கு நிறைய அண்டை நாடுகள் உள்ளன. ஆனால், சீனா சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அல்லது சூப்பர்பவர் நாடாக மாறலாம்.

சக்தி வாய்ந்த நாட்டுக்கு அருகில் வசிப்பது என்பது நமக்கு சவாலான விசயங்களில் ஒன்றாக இருக்கும் என அவர் பேசியுள்ளார். சீனாவை அரசியல், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வழிகளில் எதிர்கொள்வதற்கான வழிகள் இந்த புத்தகத்தில் உள்ளன என அவர் கூறியுள்ளார்.

தென் சீன கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய கடல் பரப்புகளை தனது வீரர்களை கொண்டு ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. தென்சீன கடல் பகுதியில் தனது படையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பிற நாடுகளுக்கு கோபம் ஏற்படும் வகையிலான தூண்டி விடும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இதனால், அந்த பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்து உள்ளது. அது ஒரு நீண்டகால தீர்க்கப்படாத விவகாரங்களில் ஒன்றாக உள்ளது.

அணு சக்தி நாடான பாகிஸ்தானை குறிப்பிடும்போது, பாண்டவர்கள் தங்களது உறவினர்களை தேர்ந்தெடுக்க முடியாது. நாம், நமது அண்டை நாட்டினரை தேர்ந்தெடுக்க முடியாது. இதுவே நமக்கு உண்மையாகவும் உள்ளது. நல்ல விசயங்கள் நடக்கும் என நம்புவோம் என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, நான் ஒரு மந்திரியாவேன் என ஒருபோதும் கனவு கூட கண்டது இல்லை. பிரதமர் மோடியை தவிர, வேறு யாரும் என்னை மந்திரியாக்கி இருக்கமாட்டார்கள் என்று கூறி அவருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்