2 வயது மகளை கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியர்

நகை திருட்டு தொடர்பான போலீஸ் விசாரணைக்கு பயந்து 2 வயது மகளை கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-26 21:35 GMT

கோலார் தங்கவயல்-

குழந்தை உடல் மீட்பு

கோலார் தாலுகா கெந்தட்டி பகுதியில் உள்ள ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வயது பெண் குழந்தைகளின் உடல் மிதந்தது. இதுபற்றி அறிந்ததும் கோலார் புறநகர் போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குளத்தின் கரையில் ஒரு கார் நின்றது. அதில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் ஒரு பர்ஸ் மற்றும் செல்போன் இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், பெங்களூரு பாகலூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் ராகுலின்

2 வயது மகள் ஜியா என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராகுல் குழந்தையை ஏரியில் வீசி கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கடன் தொல்லை

விசாரணையில், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ராகுல் பணியாற்றி வந்தார். அவருக்கு அதிகளவு கடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில், கடனை திரும்ப கொடுக்க வீட்டில் உள்ள நகைகளை திருடிய ராகுல், அதனை அடகு வைத்து கடன்காரர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மேலும், குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் நகை திருட்டு போனதாக ராகுல் நாடகமாடி உள்ளார்.

இதனால் அவரது உறவினர்கள், நகை திருட்டு குறித்து பாகலூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், பாகலூர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுலிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ராகுல், விசாரணைக்கு சென்றால் மாட்டிகொள்வோம் என பயந்துள்ளார்.

கைது

இதனால் அவர், தனது 2 வயது மகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த 15-ந்தேதி தனது காரில் கோலார் அருகே கெந்தட்டி பகுதியில் ஏரிக்கு அவர் வந்துள்ளார். பின்னர் மகளை ஏரியில் வீசி கொலை செய்துவிட்டு அவரும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் ராகுல் தப்பித்து கொண்டார். பின்னர் குழந்தையை கொன்றுவிட்டோமே என சோகமடைந்த ராகுல், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் தலைமறைவாக இருந்த ராகுலை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்