செல்லப்பிராணி நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; கணவர் லடாக், மனைவி அருணாச்சல பிரதேசத்திற்கு இடமாற்றம்...!
டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள தியாகராஜா மைதானம் டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மைதானத்தில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், டெல்லி அரசு நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் தம்பதி சஞ்சீவ் கிர்வார் மற்றும் மனைவி ரிங்கு டுஹா. ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சீவ் டெல்லி முதன்மை செயலாளராக (வருவாய்) பணியாற்றி வருகிறார். அவரது மனைவியான ரிங்கு டுஹாவும் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கணவன் - மனைவியான சஞ்சீவ் மற்றும் ரிங்கு தங்கள் செல்லப்பிராணி நாயுடன் டெல்லி தியாகராஜா மைதானத்தில் இரவு நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஐஏஎஸ் தம்பதிகள் தங்கள் செல்லப்பிராணி நாயுடன் நடைபயிற்சி செய்வதற்காக மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்-வீராங்கனைகள் இரவு 7 மணிக்கே தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
மைதானத்தை விட்டு வீரர்கள்-வீராங்கனைகள் வெளியேற்றப்பட்ட பின் ஐஏஎஸ் தம்பதி தங்கள் செல்லப்பிராணி நாயுடன் தடகள ஓடுதளம் உள்பட மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டனர். ஐஏஎஸ் தம்பதி தங்கள் செல்லப்பிராணி நாயுடன் மைதானத்தில் நடைபயிற்சி செல்லும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் ஐஏஎஸ் தம்பதியை பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, டெல்லி வருவாய்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் லடாக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு டுஹா அருணாச்சலபிரதேசத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் வீரர்-வீராங்கனைகள் இரவு 10 மணி வரை பயிற்சி செய்யலாம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க... விளையாட்டு மைதானத்தில் ஐஏஎஸ் அதிகாரி நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: டெல்லி அரசு புது உத்தரவு!