கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டால் ஆதரவு அளிப்பேன்
சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டால் ஆதரவு அளிப்பேன் என்று கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
ஆதரவு அளிப்பேன்
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.எச்.முனியப்பா நேற்று கோலாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 36 தனித்தொகுதிகள் உள்ளன. அவற்றை தவிர்த்து மற்ற எந்த தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டாலும் அதை நான் வரவேற்கிறேன். அதேபோல், சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிட்டால் எனது முழு ஆதரவை அளிப்பேன். அவருடைய வெற்றிக்காக பாடுபடுவேன்.
சகுனிகளுக்கு எச்சரிக்கை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு எதிராக சில சகுனிகள் (முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார்) சதி வேலை செய்து என்னை தோற்கடித்தார்கள். அவர்களுக்கு வரும் சட்டசபை தேர்தலில் சரியான பாடம் புகட்டுவேன் என்பதில் சந்தேகம் இல்லை. நான் எப்போதும் கட்சி மேலிட உத்தரவை மதிப்பவன். ஒருவேளை எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், ரமேஷ்குமாருடன் சேர்ந்து கோலார் மாவட்டத்தில் காங்கிரசின் வெற்றிக்காக பாடுபடுவேன்.
மேலும் நானும், ரமேஷ் குமாரும் ஒன்றாக சேர்ந்து சட்டசபை தேர்தலில் பணியாற்றவேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் வலியுறுத்தி உள்ளார். அதன்படி நான் தேர்தல் பணியில் ஈடுபடுவேன். தேசிய மற்றும் மாநில அளவில் கட்சியை பலப்படுத்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எனக்கு முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளார். அதன்படி கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.