மந்திரி பதவி வழங்காத போது பொறுமையாக இருந்தேன்

மந்திரி பதவி வழங்காதபோது பொறுமையாக இருந்ததால், தற்போது எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2023-05-14 20:16 GMT

பெங்களூரு:-

ராஜினாமா செய்தனர்

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று துமகூரு மாவட்டம் காடுசித்தேஸ்வரா மடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்-மந்திரி யார் என்பது குறித்து கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதன் பிறகு கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். இதற்கு முன்பு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

வருமான வரி சோதனை

அதன் பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கும்படி கட்சி மேலிடம் எனக்கு உத்தரவிட்டுள்ளது. அத்தகைய சவாலான சூழ்நிலையில் நான் கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பணியாற்றினேன். அதன் பிறகு எனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையினர் என்னை கைது செய்து டெல்லி சிறையில் அடைத்தனர். சிறையில் என்னை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன காா்கே ஆகியோர் சந்தித்து தைரியம் கூறினர். நான் கட்சிக்காக தான் வலி, வேதனைகளை அனுவித்தேன்.

இதுவரை எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர். கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, எனக்கு மந்திரி பதவி வழங்கவில்லை. ஆனாலும் அவருக்கு நான் ஒத்துழைப்பு வழங்கினேன். அப்போது நான் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டேன். அதனால் இப்போது எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன். எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்