அரசு நிர்வாகத்தில் வால்மீகியின் சிந்தனைகளை பயன்படுத்துகிறேன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

அரசு நிர்வாகத்தில் வால்மீகியின் சிந்தனைகளை பயன்படுத்துவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-10-09 18:45 GMT

பெங்களூரு:

வால்மீகி ஜெயந்தி

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள மகரிஷி வால்மீகி சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மிகப்பெரிய மனிதநேயமிக்கவரான மகரிஷி வால்மீகியின் ஜெயந்தியை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ராமாயணத்தை உருவாக்கி நமக்கு கொடுத்தார்.

அதனால் அவர் நமக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது கலபுரகியில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் வால்மீகி ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் மந்திரிகளாக அப்போது இருந்த ஸ்ரீராமுலு, கோவிந்த் கார்ஜோள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ராமாயண காவியம்

அதன்பிறகு அர்த்தமுள்ள வகையில் அவரது ஜெயந்தியை கொண்டாடி வருகிறோம். வால்மீகியின் தத்துவங்கள், கொள்கையின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணம், உலகில் படைக்கப்பட்ட 10 சிறந்த காவியங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பது பெருமையாக உள்ளது. இந்த ராமாயண காவியத்தை படைத்து வாழ்க்கையின் சாராம்சத்தை நமக்கு உணர்த்தியுள்ளார். அதன் மூலம் நமக்கு தெய்வீகமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை காட்டியுள்ளார்.

ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு அம்சமும் நமக்கு பயனுள்ள கருத்தாக உள்ளது. மாநிலத்தின் முதல்-மந்திரியாக வால்மீகியின் தத்துவங்களை நிர்வாகத்தில் பயன்படுத்துகிறேன். வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு சமமான வாய்ப்புகள் மற்றும் சுயமரியாதை வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க எனது அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்