நானும், சித்தராமையாவும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளோம்
நானும், சித்தராமையாவும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளோம் என்று மந்திரி வி.சோமண்ணா கூறியுள்ளார்.
மைசூரு:-
மடாதிபதியிடம் ஆசி
கர்நாடக சட்டசபை தேர்தலில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதியாக மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதி திகழ்கிறது. தனது சொந்த ஊரில் உள்ள இந்த தொகுதியில் சித்தராமையா போட்டியிடுகிறார். இதுவே எனது இறுதி தேர்தல் என அவர் அறிவித்துள்ளார். அவரை வீழ்த்த பா.ஜனதா லிங்காயத் சமுதாயத்தில் செல்வாக்குமிக்க மந்திரி வி.சோமண்ணாவை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் வி.சோமண்ணா நேற்று மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள சுத்தூர் மடத்திற்கு சென்றார். அங்கு மடாதிபதி சிவராத்திரி தேஷிகேந்திர சுவாமியிடம் அவர் ஆசி வாங்கினார்.
பின்னர் வி.சோமண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும் சித்தராமையாவும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளோம். இப்போது நான் வருணா தொகுதியில் சாதாரண வேட்பாளர் மட்டுமே. நான் சிறியவன். இங்கு கட்சியும், தொண்டர்களும் தான் பெரியவர்கள். இவர்களை விட யாரும் பெரிய ஆள் கிடையாது. பிரசாரத்திற்கு யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்று விவாதிக்க ேதவையில்லாதது. வருணா தொகுதியில் அனைவரும் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று முதல் பிரசாரம்
75 வயதை கடந்த எனக்கு என்ன பதவி கிடைக்கும் என்பது எனக்கு தெரியும். நான் இங்கு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. இது எனது கடைசி தேர்தலோ அல்லது அரசியல் ஓய்வோ அல்ல. கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சிக்குள் சிலர் கூறும் கருத்தை
ெபரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. நாளை (அதாவது இன்று) முதல் வருணா தொகுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். அனைத்து கிராமங்களுக்கு சென்று வாக்கு கேட்பேன். வருணா தொகுதியில் போட்டியிட வருகிற 17-ந்தேதியும், சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட 19-ந்தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.